"தாதா" மகேஸ்வரி கைது.. நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..!
Published : Apr 10, 2022 6:21 PM
"தாதா" மகேஸ்வரி கைது.. நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..!
Apr 10, 2022 6:21 PM
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் கடந்த 27 ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனையில் கொடிகட்டிப் பறந்த மகேஸ்வரியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். "சொர்ணாக்காவாக" சுற்றித் திரிந்தவர், தம்பதி சகிதமாக கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகேஸ்வரி என்ற பெண், சினிமாவில் வரும் தாதா போல சண்டியர்தனம் செய்து கொண்டு அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்தவர். சிறு சிறு பாக்கெட்டுகளில் ஸ்பிரிட் எனப்படும் எரிசாராயத்தை நிரப்பி கூலித் தொழிலாளிகளை குறி வைத்து விற்பனை செய்து வந்தவர். அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளிகள், கையில் கிடைக்கும் பணத்துக்கு பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு வீட்டில் வந்து ரகளை செய்வது வழக்கம்.
இந்த பாக்கெட் சாராய புழக்கத்தால் அப்பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டதோடு, கணவரை இழந்து நிர்கதியாகும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வந்தது. இரவு பகல் பாராமல் எந்த நேரம் வேண்டுமானாலும் கிடைக்கும் இந்த பாக்கெட் சாராயம் குறித்து போலீசில் புகாரளிக்கும் இளைஞர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டனர் என்றும் சிலர் தாக்கப்பட்டனர் என்றும் ஒரு சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. 90களில் தொடங்கிய மகேஸ்வரியின் கள்ளச்சாராய விற்பனை பெரும் சாம்ராஜ்யமாக விரிவடையத் தொடங்கியது.
கடந்த 27 ஆண்டுகளாக வாணியம்பாடியில் கள்ளச்சாராய தொழிலில் கொடிகட்டிப் பறந்து வந்த மகேஸ்வரியின் மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏழு முறை அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. ஆனால் அடங்காத தாதாவாக வலம் வந்துள்ளார் மகேஸ்வரி.
சில தினங்களுக்கு முன் திருவிழா கூட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றவர்களைத் தட்டிக் கேட்க முயன்ற இளைஞர்கள் மீது மகேஸ்வரியின் ஆட்கள் தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து வாணியம்பாடி நேதாஜி நகர் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இளைஞர்களே களமிறங்கி 30க்கும் மேற்பட்ட சாராய மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அவற்றை போலீசார் எடுத்துச் செல்ல முயன்றபோது, மகேஸ்வரி கும்பலை கைது செய்தால்தான் சாராய பாக்கெட்டுகளை விடுவிப்போம் என அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
பொதுமக்கள் பொறுமை இழந்து போராட்டங்களை அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா வாணியம்பாடி சென்று, தாலுகா காவல் நிலையத்தில் மகேஸ்வரி மீதான வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். விரைந்து அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதையடுத்து. டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீஸார் மகேஸ்வரியை பிடிக்க களமிறங்கினர்.
மகேஸ்வரி திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலைக் கொண்டு அங்கு சென்ற தனிப்படை விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தி மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் உட்பட 7 பேரை கைது செய்தனர். முன்னதாக வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் பதுங்கி இருந்த மகேஸ்வரியின் அடியாட்கள் 20க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
மகேஸ்வரி கும்பலின் கைதால் நிம்மதி பெருமூச்சு விடும் வாணியம்பாடி மக்கள், பலரது வாழ்க்கை சீரழியக் காரணமான அவர்கள் வெளியே வர முடியாதபடி கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாராய கும்பலிடம் நடத்திய விசாரணையில் நேதாதி நகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சாராய கேண்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே போலீசாருக்கு போக்கு காட்டிவிட்டு தப்ப முயன்ற மகேஸ்வரியின் மகன் சின்ன ராஜ், அவனது கூட்டாளி மோகன் ஆகியோர் அருகில் இருந்த பாறைகளுக்கு நடுவே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சின்னராஜ்க்கு கை முறிவும், மோகனுக்கு கால் முறிவும் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருவருக்கும் மாவு கட்டு போட்டு போலீசார் சிறையில் அடைத்தனர்.